சமையல் தொடங்கி விட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் வாசனை மூக்கை துளைக்க ஆரம்பித்து விடும். அந்த மணம் பசியை கொஞ்சம் மேலும் கிள்ளி விடும். அந்த வாசனைக்காக காத்திருந்தேன். இத்தனை நாளிலும் ஏதோ சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் இன்று மட்டும் ஏன் இவ்வளவு சந்தோஷம் ! காரணம் கொரோனா… கொரோனாவால் பூட்டப்பட்ட வீதிகளும் கடைகளும் இன்று மட்டும் திறக்கப்பட்டது. அதனால் அப்பா இன்று வெளியில் சென்றார். அதனால் எனக்கு பிடித்த மட்டி வாங்கி வந்தார். அதனால் குறிஞ்சா சுண்டலில் இருந்து இன்று விடுமுறை. அதனால் இன்று மட்டும் மாறிய இந்த நாள் போல உலகமும் தலைகிழாக மாறி விட்டதே என்ற எண்ணம் எப்போதும் என் மனதில் எழும். இயந்திர மயமாக மாறி விட்டது என்று எப்போதும் புலம்பும் அந்த காலத்தில் 3ஆம் வகுப்பு வரை படித்த என் அம்மா கூட தம்பிக்கு பாடம் சொல்லி கொடுக்க தினமும் அப்பாவின் போனில் பயிற்சி எடுக்கிறாவு. நம்ம என்ன விதிவிலக்கா! சாதாரண மிடில் கிளாஸ் குடும்பம் தானே! உலக மாற்றத்தை உள்வாங்காமல் எப்படி வாழ முடியும். ஏற்றமும் இல்லை இறக்கமும் இல்லை. ஒரே மாதிரியான தினசரி போக்குடன் போகிறது நாட்கள். ஆ… ஆ… அம்மாவின் மட்டி பிரட்டல் மட்டியுடன் வெங்காயமும் கறிவேப்பிலையும் சேர்ந்து கருகும் வாசனை என்னை பைத்தியக்காரனாக மாற்றிக் கொண்டிருகிறது. அப்பா வருகைக்காக காத்திருகின்றேன். அப்பா சீட்டுக்காசு கட்ட கமலா அக்கா வீட்டிக்கு போயிருந்தார். அப்பா வந்ததும் அம்மா பீங்கான்ல சோத்த போடுவாள். சம்பள காசு இன்டைக்கு தான் அப்பாக்கு கிடச்சது. போன மாதம் பாத்த வேலைக்கு…அடிக்கடி வேலையில்லை இந்த கொரோனாவால் பயணத்தடையால் பஸ் ஓடவில்லை பஸ் ஓடினாதான் அப்பாக்கு வேலை. ஆம் அப்பா ஒரு மெக்கானிக். பஸ் டிப்போல வேலை பார்க்கிறார். மாசம் முடியும் போதுதான் கையில் காசு கிடைக்கும். அது வரும்வரை குறிஞ்சா சுண்டல்தான் துணை. மாதக் கடைசியில் அம்மா எப்போதும் புலம்புவாள் எல்லாம் அப்பாவால்தான் என்று அம்மப்பா என் அம்மாவுக்கு கொடுத்த சீதன வளவை அப்பா வித்துப் போட்டாரு எண்டு எப்போதும் இருவருக்கும் சண்டை வரும். அந்த வளவு இப்போதைய மட்டக்களப்பு நகர் பகுதியில் இருந்தது. என் அம்மப்பா 100 ரூபாய்க்கு அதை வாங்கினார் என்று எப்போதும் அம்மா சொல்லுவா. இப்ப இருந்திருந்தா கடை கட்டி வியாபாரம் பண்ணி நல்லா இருந்திருப்போம் என்பது அம்மாவின் கவலைகளில் ஒன்று. ஆனால் இந்த வருடம் இன்னுமொரு கவலை கூடிவிட்டது. இந்த வருடம் திருவிழா இல்லை. 5 நாட்கள் எங்கள் குலதெய்வம் கண்ணகியம்மன் திருவிழா மிக சிறப்பாக நடக்கும் .வசந்தன் கூத்து உட்பட பல கூத்துகள் அரங்கேற்றப்படும். ஊரே ஒன்றுகூடி கொம்பு விளையாட்டு விளையாடுவோம் அத்தனையும் இல்லாமல் போனது பெரும் கவலை அம்மாக்கு.
“ றோட்டுள்ள எல்லாம் சரியான சனம் சமான் வாங்கி எல்லாதையும் முடிக்குதுகள் “ எண்டு அப்பா திட்டிக் கொண்டே தகர கதவை திறந்தார். சந்தோஷத்தில் என் மனம் துள்ளியது. மட்டி பிரட்டலை நினைத்து. அப்பா முகத்தை கழுவிட்டு குசினி வாசலில் வந்து இருந்தார். என் தம்பி அப்போதுதான் நித்திரையில் இருந்து எழும்பினான் .ஸ்கூல் இல்லாததால் நல்லா திண்டுட்டு நித்தரை கொள்ளுவதுதான் அவன் வேலை கடைசி புள்ளை என்பதால் நல்ல செல்லம் அவருக்கு வீட்டில் என்னைத் தவிர. 10 வயசு தான் ஆகிறது ஆனால் அவனுடைய கதை பேச்சு நடவடிக்கை யாவும் 25 வயசு ஆள் போல இருக்கும். குறிஞ்சா சுண்டல் எல்லோருக்கும் என்றால் அவனுக்கு மட்டும் முட்டை கடன் வாங்கி பொரிச்சிக் குடுப்பாள் அம்மா. எல்லோரும் குசினிக்குள்; வந்தாச்சி அம்மா பீங்கான்களை எடுக்கும் சத்தமும் கேட்டது. இனி விருந்து தான். அந்த மட்டிப் பிரட்டலை கையில் அள்ளும் போது என் வாயில் எச்சில் வடிய ஆரம்பித்து விட்டது. மட்டியை வாயில் வைத்ததும் அந்த ஊறிய எச்சிலுடன் கலந்து அமிர்தத்தை விழுங்கியது போல அந்த சுவை அதில் நான் காணாமல் ஆக்கப்பட்டேன் என்று கூட வைத்துக் கொள்ளலாம். இன்று களுத்துவரை திண்டிருப்பேன் ஆனால் இரவைக்கும் வேண்டும் என்று சொல்லி மட்டி கறியை எடுத்து வைத்து விட்டாள் அம்மா. ஒரு பீங்கான் சோறு மட்டியுடன் எப்படி முடிந்தது என்று தெரியவில்லை. பசி அடங்கவில்லை அந்த பசி அரக்கனை அழிக்க வந்த அவதாரமாக பருப்பு கறி இருந்தது. ஒன்றரைப் பீங்கான் சோறு சாப்பிட்டேன் பருப்புடன். நாளை அல்லது அடுத்த கிழமை முழுவதும் வரபோகும் குறிஞ்சா சுண்டலை பற்றிய கவலை இன்றி. எல்லோரும் சாப்பிட்டு முடிந்தது. அப்பா கதிரையில் அமர்ந்தார். அம்மா சமையல் பாத்திரங்களை கழுவ ஆரம்பித்தாள்;. தம்பி விளையாடிக் கொண்டு தூங்க ஆரம்பித்து விட்டான். எனக்கும் கொஞ்சம் தூக்கம் யாரோ பிடித்து இழுப்பது போல நித்திரை கண்னை கட்டியது. சுவர் ஓரமாக சாய்ந்தவாறு சமாதி நிலையில் தூங்கி விட்டேன்.
திடீர் என்று யாரோ அழும் சத்தம் கேட்டது. திடுக்கிட்டு எழுந்தேன். அது வேற யாரும் அல்ல என் தம்பிதான்! எதற்கோ அடம் பிடித்து அழுது கொண்டிருந்தான். நித்திரை கலக்கம் என்பதால் எதற்கு என்று புரியாமல் நடக்கும் யாவற்றையும் பக்கத்து வீட்டுக்காரனை போல ஆ.. என்று பார்த்துக் கொண்டிருந்தேன். “நாளைக்கு பொரிச்சி தாரன்டா “ அம்மா தம்பியிடன் சொன்ன போதுதான் வி~யம் புரிந்தது. சாப்பாட்டுக்கு தான் தினமும் எங்கள் வீட்டில் திருவிழா நடக்குமே… புதிய வி~யம் ஒன்றுமில்லை தினமும் நடப்பதுதான் என்று என்னை தெளிவு படுத்திக் கொண்டேன். வழக்கம் போல கிழங்கு பொரியலுக்கு தான் அந்த போராட்டம். சினிங்கி அழுது கொண்டே இருந்தான் மறு புறம் இவையாவற்றையும் பார்த்தவாறு அப்பா தென்னை மரத்திற்கு பாத்தி வெட்டி கொண்டிருந்தார். என் மனதில் இன்டைக்கு இவனுக்கு செம பூசை விழப்போகிறது என்ற ஆனந்தம் ஓடிக் கொண்டிருந்து. வாழ்கையில் எதிர்பார்க்காதவற்றை எதிர் பாருங்கள் என்று அப்;பா எப்போதும் சொல்லுவார். அது போல அப்பாவே நடந்து கொண்டார் அன்று. “ தம்பி இங்க வா .. “ அது அப்பா தான்! என்னை அழைத்தார். ஏன் என்ற கேள்வியை முகம் முழுவதும் வைத்துக் கொண்டே அவர் அருகே சென்றேன். “போய் என்ட சேட் பக்கட்டுக்குள்ள காசி இருக்கு அதுல 50ரூபா எடுத்திட்டு போய் கிழங்கு வாங்கிட்டு வந்து குடு” என்றார் கொஞ்சம் பொறாமையாக தான் இருந்தது தம்பி ஜெயிச்சpட்டானே என்று. மறு புறம் கிழங்கு பொறியல் வருகிறது என்று சந்தோஷமாக இருந்தது. ஆனால் அந்த சந்தோஷத்தை பொறாமை கொஞ்சம் மிஞ்சி விட்டது என்பதுதான் எதார்த்தம்.
அப்பாவின் சைக்கிள் வெகு நாட்களுக்கு பிறகு என் கைக்கு வந்தது. மின்னல் வீரன் போல பறக்க மனம் துடித்தது ஆனால் சைக்கிளுக்கு ஏதும் நடந்தால் அம்மா அடி பின்னிவிடுவாள் அதோடு ஏதும் உடைந்து விட்டால் காசு வேணும் என்ற அச்சத்திலே கால் மெதுவாக மிதித்தது. இருந்தும் ஏதும் நம்மை மிறி நடக்காது என்ற தைரியத்தில் கொஞ்சம் வேகம் கூட்டினேன். நேரம் 3.30 வீதி யாரும் அற்ற அனாதையாக காட்சியளித்தது. சில வீட்டிக்கு முன் கண்ணாடி பெட்டிகள் வெறுமையாக இருந்தது. வழமையாக அங்கு இருக்கும் கடைகளும் இன்று மூடிக்கிடந்தது. தேடித் தேடி பிரதான வீதிக்குள் நுழைந்து விட்டேன். தூரத்தில் பச்சை நிற ஆமிகாரனின் வண்டி வருவது தெரிந்தது. என்னை அறியாமால் சைக்கிளை குறுக்கு வீதிக்குள் விட்டேன். மனசு படபட என அடித்துக் கொண்டது நான் ஏன் இப்படி பயப்படுகிறேன் என்று தெரியவில்லை. அம்மா இரவுகளில் சொல்லும் 90ஆம் ஆண்டு பிரச்சினைஇ சத்துருக்கொண்டானில் நடந்த உள்ளுர் கலவரக் கதைகள் காரணமாக இருக்கலாம். வேகமாக அடித்துக் கொண்ட மனசு தூரத்தில் கண்ணாடிப் பெட்டியில் ஏதோ அடுக்கி இருப்பது கண்டதும் கொஞ்சம் லேசானது. அந்த வீட்டை நோக்கி சைக்கிளை ஏவி விட்டேன். சிட்டுக்குருவி போல அங்கு போய் நின்றது. என் எதிர்பார்ப்புகளை உடைப்பதில் இந்த கடவுளுக்கு அப்படி என்ன ஆனந்தம். கண்ணாடி பெட்டி முழுவதும் வடைஇ கட்லட்இ பட்டிஸ் என்று விதம் விதமாக அடுக்கி இருந்தது. பார்க்கவே வாயில் எச்சில் ஊற்pயது. ஆனால் கிழங்கை மட்டும் காணவில்லை.
வீட்டுக்குள் இருந்து ஒரு அக்கா வந்தார். “கிழங்கு இல்லையா அக்கா”என்றோன். என்னை பார்த்து மாஸ்கை போட்டுக் கொண்டு “இல்லடா தம்பி கொஞ்சம் தான் பொறிச்சன் ஆட்க்கள் வாங்கிட்டு போய்டாங்க… இந்தா பட்டிஸ் இருக்கிறது வட இருக்கிறது” என்றாள்;. என் மனமோ வேறு கணக்கு போட்டுக் கொண்டு இருந்தது. பட்டிஸ் கட்லட் எல்லாம் விலை அதிகம் வாங்கினால் 50 ரூபாய்க்கு நாலைந்து தான் வரும் ஆனால் கிழங்கு வாங்கினால் நிறைய வரும் எல்லாரும் சாப்பிடலாம் என்று என் மனக்கணக்கு முடிவு சொல்லியது. “என்னக்கா கிழங்கு இல்லையா… எல்லா இடமும் தேடி திரிங்சி வாரன்” என்று முகத்ததை மிக கவலையாக வைத்துக் கொண்டு சொன்னேன். கடைக்கார அக்கா என்னைப் பாரத்;து பரிதாப படுவது போல இருந்தது. மேலும் கவலையாக முகத்தை வைத்துக் கொண்டு “சரியக்கா… போய்டு வாரன்” என்று இழுத்தேன். “நில்லு… நில்லு… கிழங்கு தானே அந்த 4வது சந்திக்குள்;ள ஒரு மணல் ஒழுங்க இருக்கு அதுல கடைசி வீட்ட போ.. மரவள்ளிக் கிழங்கு இருக்கும் வாங்கிட்டு வா…” என்றாள் என் மனசு சும்மா குத்தாட்டம் போட்டது சிரித்துக் கொண்டே சைக்கிளை திருப்பினேன். திடீர் என்று ஞாபகம் வந்தது எவ்வளவுக்கு வாங்க வேண்டும் என்று கேட்டவில்லை என்று திருப்பி கடைக்கார அக்காவை பார்தேன். அக்கா உடனே என்னைப் பார்த்து “நீ போய் கேளு தருவாங்க அவங்களுக்கு தெரியும்” என்றாள்;. நான் அக்கா சொன்ன இடத்தை துப்பறிவாளன் போல மூளையை கூர்மையாக்கி கொண்டு கண்டு பிடிக்கும் வேலையில் ஈடுபட்டேன். மணல் ஒழுங்கைக்குள் சைக்கிள் நகரவில்லை. பெரும் பாடுபட்டு உருட்டிக் கொண்டு அந்த கடைசி வீட்டை அடைந்தேன்.
“வீடு என்டு கிழங்கு கடைக்கார அக்கா சென்னாவு! இது என்னடாப்பா… குடிசை கூட பரவால போல இதுல எப்பிடி இருக்கிறது” என்று எனக்குள் கோட்டுக் கொண்டே “அண்ணன் … அண்ணன்” என்று அழைத்தேன். அந்த மந்திர குகைக்குள் இருந்து சூனியக்காரி போல ஒரு அக்கா வந்தாள் கையில் குழந்தையுடன் ஆனால் அது குழந்தை இல்லை முகத்தில் வயது போன கிழவன் போல இருந்தது. கொஞ்சம் பயமாவே இருந்தது. வெளியே வந்தவள் “என்ன… என்ன வேனும்” என்றாள். அது ஆண் குரல் போல அவ்வளவு கரடுமுரடாக இருந்தது. “அந்த கிழங்கு கடக்கார அக்கா கிழங்கு வாங்கிட்டு வர சொன்னவ…” என்றேன் “ஆ.. இரு எடுத்துட்டு வாரன்” என்று செல்லி விட்டு அந்த பிள்ளையை அந்த கூடத்தின் வாசலின் முனையில் கிடத்தி விட்டு உள்ளே சென்றாள். அந்த பிள்ளை அந்த முற்றத்தில் கொதித்துக் கொண்டு இருந்த பானையையே பார்த்துக் கொண்டிருந்தது. நானே அந்த வீட்டின் முற்றத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டிந்தேன். அந்த சின்ன கூடாரத்தின் பின்புறம் மரவள்ளி நிறைய நாட்டப்பட்டு இருந்தது. பழைய உடைந்த பொருட்கள் அங்கும் இங்குமாக சிதறிக் கிடந்தது. சுற்றிப் பார்துக் கொண்டே முன்பக்கமாக திரும்பினேன். பேய் பறந்து வந்து நின்றது போல என் முன்னே நின்றாள். ஒரு நிமிடம் திடுக்கிட்டு விட்டேன். “இந்தா இருக்கு கிழங்கு” என்றாள்;. “ஆ” என்றேன். அதன் பின்பு தான் கிழங்கை பார்த்தேன் முத்தின கிழங்கு போல இருந்தது பால் வத்தல் கிழங்காக இருந்தால் சாப்பிடவே முடியாது. “அக்கா பால் வத்தல் கிழங்கு போல கிடக்கு வேற கிழங்கு தாங்க” என்றேன் . “இவ்வளவு தான்டா தம்பி கிடக்கு மத்தது எல்லாம் இன்னும் பிடுங்குற பருவம் வரல” என்றாள்;. அப்படி சொல்லிக் கொண்டே கையில் கத்தியை எடுத்தாள் வெகு நேரமாக எதையே தேடினால் நானே இந்த பால் வத்தல் கிழங்கை எப்படி வேண்டாம் என்று சொல்வது பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவளோ மண்ணில் கிடந்த சோப்பின் பேக்குகளை எடுத்து பாரத்;து எறிந்து கொண்டிருந்தாள். பால் வத்தல் கிழங்குடன் மண்ணில் கிடக்கும் குப்பை பேக்கில் வேற போட்டுத்தர போகிறாள் இதை எப்படியும் வேண்டாம் என்று சொல்லிவிட வேண்டும் என்று வாயைத் திறந்தேன். இடி இடிக்கும் சத்தம் போல இரைச்சலுடன் கெட்ட வார்த்தைகள். அது என் வாயில் இருந்து வரவில்லை.
நல்ல மச்சள் நிறத்தில் ஒருத்தி பார்க்க கொழுக்கு மொழுக்கு என்று இருந்தாள். பார்க்க மிக சாதுவான முகம் ஆனால் வாயில் இருந்து வி~த்தை கக்குவது போல திட்டிக் கொண்டு வந்தாள். அவள் திட்டிய வார்தைகளை என் அப்பா பக்கத்து வீட்டுக் காரனுடன் வேலிச் சண்டை போட்ட போது சொன்ன அதே வார்தைகள் தான். அந்த வீட்டு அக்கா பதறி துடித்து விட்டாள்;. “அக்கா அடுத்த மாசம் சேத்து தாரன் அக்கா .. கத்தாதிங்க அக்கா.. என்ட நிலைமை தெரியும் தானே .. “ என்று காலில் விழாத குறையாக அழுதாள். அந்த பொம்பிள கொஞ்சமும் இரங்கவில்லை. கொஞ்சமும் கருணை அற்றவளாக அந்த வீட்டு அக்காவை தீட்டித் தீரத்தாள். உனக்கு நிறைய காலம் வட்டி வாங்காம விட்டனான் இனி அது சரிவராது யாரோ ஒருத்தன் வீட்டுக்கு வந்து போறானாம். அவனிட்;ட வாங்கி தாடி உன்ட கள்ள புருசஷன்;ட்ட” என்றாள்; அந்த அரக்கி அந்த வீட்டு அக்கா இன்னும் அதிகமாக அழத்தொடங்கிவிட்டாள். நடப்பதை பார்த்தபடி உறைந்து போய் நின்றுகொண்டு இருந்தேன். விம்மி அழுது கொண்டே “அக்கா என்ட நிலம தெரிஞ்சுமா .. இப்பிடி கதைக்கிங்க ? “ என்றாள்; பதிலுக்கு அந்த அரக்கி “நீ இப்டிபட்டவள் என்டதாலதான் ஆண்டவன் இப்பிடி ஒரு புள்ளளைய குடுத்திருக்கான்டி உனக்கு” என்றவுடன் அந்த வீட்டு அக்காவிற்கு தலைகால் புரியாத அளவு கோவம் வந்துவிட்டது பதிலுக்கு கோவத்தில் வட்டிக்காரிக்கு அதே செம்மொழியில் பதில் கொடுக்க தொடங்கி விட்டாள். சண்டை பெரிதாக மாறியது. இறுதியாக “நீ பத்தினி என்ட இந்த புள்ள ஒருத்தனுக்குதான் புறந்த எண்டா எண்ட வட்டி காச தாடி” என்றாள்;. அந்த வட்டி வாங்கும் உண்மையான சூனியக்காரி. இறுதியில் அந்த வீட்டுக்கார அக்கா அந்த தருணம் தன்னை நிதானப் படுத்திக் கொண்டு ஏதே தீர்மானம் எடுத்தது போல கூடாரத்திற்குள் போய் காசை எடுத்துக் கொண்டு நேராக என்னை நோக்கி வந்தாள். “கிரிஜா காசு தந்தவளா? ” என்றாள்;. இல்லை என்ற போல தலையை அசைத்தவாறு காசு வைத்திருந்த கையை நீட்டி விட்டேன். முளைக்கும் மனித மனிதாபிமான மனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றது போல. என்னிடம் வாங்கிய 50 ரூபாயையும் சேர்த்து அந்த பொம்பளையிடம் கொடுத்தாள். “என்டா புள்ளைக்கு பால் வாங்க வச்சிருந்த காச பறிச்சிட்டு போறாடி. நீ அழிஞ்சி போயிருவாடி மண்ணோட மண்ணா போயிருவாடி” என்று மண்னை அள்ளி மூன்று தடைவை எறிந்து சாபம் விட்டாள். பின்பு அவளை அவள் நிதானப் படுத்திக் கொண்டாள். ஆனால் அழுகையை அடக்க முடியாதவளாக அழுதுகொண்டே என்னை நிமிர்ந்து பார்தது விட்டு. மறுபடியும் சொப்பின் பேக்கை தேட ஆரம்பித்தாள். ஒரு பெரிய துணிப் பேக்கை எடுத்தாள். அந்த பேக்குகுள் இருந்து ஒரு புது சொப்பின் பேக்கை எடுத்து கொண்டு என் பக்கம் வந்தாள். கிழங்குகளை துண்டுகளாக வெட்டி உள்ளே போட்டாள் வெட்டிய அனைத்து கிழங்கும் நல்ல மாக்கிழங்குகள். அழுது கொண்டு கண்ணைத் துடைத்தவாறு கிழங்கை நீட்டினாள். வாங்கி கொண்டு சைக்கிளை அந்த மணலில் தள்ள தொடங்கினேன். தள்ளிக் கொண்டே திரும்பிப் பார்த்தேன். அந்த அக்கா எனக்கு கொடுத்த கிழங்கின் மீதித்துண்டுகளை அள்ளி அந்த கொதித்த பானைக்குள் போட்டாள் அந்த கூடாரத்தில் படுத்திருந்த பிள்ளை அங்கேயே கிடந்தது. கை கால் அசைவின்றி. சற்றென்று திரும்பிக் கொண்N;டன். என் மனது நிலையாக இல்லை. அந்த பிள்ளை கை கால் இயலாத பிள்ளையா ? அல்லது சாப்பிடாமல் இப்படியாக ஆகிவிட்டதா ? கிழங்கு தான் மதிய சாப்பாடா ? அந்த பிள்ளை பால் வாங்க இனி என்ன செய்வாள் ? அந்த வந்து போகும் ஒருத்தன் யார்? இவளது கணவன் எங்கே ? இவளது உறவுகள் எங்கே ? எப்படி கிழங்கு விற்று வாழ முடியும் ? என்று ஆயிரம் கேள்விகளுடன் கிழங்கு கடையை அடைந்தேன்.
கிழங்கு கடைக்கார அக்கா பார்த்து சிரித்துக் கொண்டே “வாங்கிட்டியா” என்றாள்;. கிழங்கை கொடுத்து விட்டு அந்த கேள்விகளுக்கு பதிலை தேடிக் கொண்டு இருந்தேன். கிழங்கு கடைக்கார அக்காவும் அதற்குள் கிழங்கை பொரித்து எடுத்து விட்டாள். “இந்தாடா தம்பி” என்றாள் கடைக்கார அக்கா. அப்போதுதான் சுய நினைவுக்கு வந்தேன் . “ஆ” என்று கிழங்கை வாங்கிக் கொண்டேன். அப்படியே சைக்கிள் பக்கமாக திருப்ப “காசுடா தம்பி” என்றாள் . அப்போதுதான் காசு கிழங்கு வாங்கின அக்காவிடம் காசு கொடுத்தது. “அக்கா சொல்ல மறந்துட்டன். அந்த அக்கா வாங்கி எடுத்திடாவு உங்கட்ட சொல்ல சொன்னாவு..”என்றேன் கடைக்கார அக்கா கொஞ்சம் எரிச்சலடைந்தது போல இருந்தது. “என்னடா மனே சொல்லுரல்லயா நேரத்தோட ..” என்று சலித்துக் கொண்டாள். “எவ்வளவு குடுத்தனி” என்றாள். “50 ரூபாய்யும் கொடுத்துட்டன்” என்றேன். கொஞ்சம் தயங்கியவாறு. “வேற காசு வச்சிருக்கியா”என்றாள் இல்லை என்று தலையை ஆட்டினேன் கொஞ்ச நேரம் சிந்தித்த அவள் “அந்த கிழங்க தா”என்றாள். கொடுக்கும் போது கிழங்கு தரமாட்டாள் போல அந்த வீட்டுக்கார அக்காட்ட எப்படி காச திரும்ப கேட்பது என்ற தயக்கத்தில் என் மனதிற்குள் 10 அதிவேக ரயில்கள் ஷஓடிக்கொண்டிருந்தது. கடைக்கார அக்கா கிழங்கு பையை திறந்து. கொஞ்ச கிழங்கு துண்டுகளை எடுத்தாள். அப்போதுதான் அந்த வீட்டுக்கார அக்கா பெரிய கிழங்கு மூண்;றை நிறைய துண்டுகளாக வெட்டி போட்டாள் என்ற நினைவு வந்தது. நிறைய வரும் நல்லா சாப்பிடலாம் என்று நான் கட்டி வைத்த மனக்கோட்டைகள் தூள் தூளாக உடைந்தது. கால்வாசி கிழங்கை எடுத்து கொண்டிருந்த காட்சியை பார்க்கும் போது “இந்தாட தம்பி கிழங்கு என்றாள்;”முழுவதும் உடைந்தவனாக கிழங்கை வாங்கிக் கொண்டு அந்த வீட்டு அக்கா தன் பிள்ளைக்கு மதிய உணவாக தினமும் கிழங்கைதான் கொடுக்கிறாள் என்ற எதார்தம் புரியாமல் ? என் கண் முன் நடந்ததை மறந்து. அந்த கடைக்காரி தன் உழைப்பு ஊதியமாகதான் அந்த கிழங்கை எடுத்தாள் என்ற நியாத்தை ஏற்க மறத்து. இந்த கிழங்கு வீட்டில் எல்லாருக்கும் போதுமா? தம்பி மேலதிகமாக இரண்டு துண்டு கேட்பானே! என்ற கவலையுடன் மட்டுமே மெல்ல மெல்ல நகர்ந்தேன் வீட்டை நோக்கி. நான் ராஜ். எனக்கு வயது 19.
முற்றும்
0 கருத்துகள்